ஜெனிவா: கொரோனா வைரஸ், உலகளவில் மொத்தம் 2.5 கோடி பேரின் வேலைகளுக்கு உலை வைக்கும் என்றதொரு அதிர்ச்சி தகவல் ஐ.நா. அவையின் தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது. கொரோனா பீதியால் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வகையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலையும் மோசமாக சரிந்துள்ளது. அனைத்து நாடுகளிலும் உள்நாட்டு உற்பத்தி மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் 2.5 கோடி மக்கள் வேலைகளை இழக்க வாய்ப்புள்ளது மற்றும் 3.40 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பும் ஏற்படும்.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் வேலை இழப்புகளை சரிசெய்ய, சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் விரைவில் ஒன்றிணைந்து, கூடிப்பேசி கொள்கை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையை குறைக்க முடியும் என்கின்றனர்.