கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்துதல் விதிகளை 93 பேர் மீறி உள்ளனர்.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.    அவற்றில் ஒன்று வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவோர் தங்களைத் தானே 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்துதல் ஆகும்.

இவர்கள் 2 வாரங்களுக்கு தங்கள் இல்லத்தினுள்ளேயே தனிமையில் இருக்க வேண்டும்.   யாரையும் சந்திக்கக் கூடாது.  குறிப்பாக வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.   வெளிநாடு சென்று திரும்புவோர் மூலம் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்படுவதால் இந்த விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த சிலர் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களுக்கும் சுற்றுவதாகத் தெரிய வந்தது  இவ்வாறு வரக்கூடாது என குஜராத் துணை முதல்வர் அவர்களுக்கு அறிவுரை அளித்துள்ளார்.  ஆயினும்  அதைப் பலரும் கருத்தில் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

அவ்வகையில் அகமதாபாத் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் விக்ரம் நகர் இஸ்ரோ காலனியில் தனிமைப்படுத்துதல் விதியை மீறிச் சுற்றித் திரிந்த 10 பேரைக் கண்டு பிடித்துள்ளனர்.   இது குறித்து அந்த காலனியில் வசிப்போர் இ மெயில் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது.  அவர்களிடம் தனிமைப்படுத்துதல் அவசியத்தை விளக்கிய அதிகாரிகள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதைப் போல் வீட்டில் தனிமைப்படுத்த அளித்த உத்தரவை மீறி ஒரு பிறந்தநாள் விருந்தில் கலந்துக் கொண்ட மணிநகர் பகுதியைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.   இது சுகாதார அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தெரிய வந்துள்ளது.  இவ்வாறு குஜராத் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் சுமார் 93 பேர் விதி மீறல் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.