டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், தினசரி தொற்று பாதிப்பு  3.14 சதவிகிதமாகவும்,  சிகிச்சையில் உள்ளோர் 3.89 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைந்து வருவது தொடர்கிறது.  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  32,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  97,35,850 ஆக உயர்ந்துள்ளது .  தினசரி தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 3.14 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 360 ஆக உள்ளது.

அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 36 ஆயிரத்து 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  92 லட்சத்து 15 ஆயிரத்து 581 க உள்ளது. மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் நான்கு சதவீதத்துக்கும் குறைவாக, அதாவது வெறும் 3.89 சதவீதம் என்னும் அளவில் உள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 74,460 பேர்  சிகிச்சையில் உள்ளனர். இரண்டாவதாக கேரளாவில் 59 ஆயிரத்து 873 பேரும், மூன்றாவதாக, தலைநகர் டெல்லியில் 22,310 பேரும் கொரோனாவுக்க  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினமும் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்டுள்ள மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 15 கோடியை நெருங்கி, 14,98,36,767 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. தினமும் 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,22,712 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 2,220 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 19 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாராந்திர தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.