அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் கடந்த சில நாட்களாக சற்று உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல், சுவாசப்பிரச்சினை உள்பட  தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டுட்ம 462 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  8,52,478  ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்  3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   இதுவரை 12,502 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில்  8,35,506 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  இது மக்களிடையேஅச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் மக்களின் மெத்தனம் என்று குற்றம் சாட்டும் மருத்துவ நிபுணர்கள், பெரும்பாலானோர் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்றும், முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர் என்று கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் எந்தவொரு கொரோனாநெறிமுறைகளையும் எந்தவொரு கட்சியினரும் கடைபிடிக்க முன்வருவதில்லை. அதை அரசும் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. இதனால், தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதனால், அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களை கண்காணிக்கும் வகையில் கரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், முக்கவசம் அணியாதவர்களிடம்  அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தவும்  அறிவுறுத்தப்பட்டு என்று தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கொரோனா தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், முக்கவசம் அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.