நாட்டின் வேலையின்மை விகிதத்தை அதிகரித்த கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் பின்விளைவுகளால், நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதம் 27.11% என்பதாக அதிகரித்துள்ளது என்று சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிஎம்ஐஇ எனப்படுவது இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்று கூறப்படுகிறது. அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அச்சமயத்தில் வேலையின்மை விகிதம் என்பது 7%க்கும் குறைவாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 23.52% என்பதாக அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக, மே மாதம் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 27.11% ஆக அதிகரித்துள்ளது. வேலையின்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 26.69% என்பதாகவும், நகர்ப்புறங்களில் 29.22% என்பதாகவும் காணப்படுகிறது.

மேலும், மராட்டியத்தில் 20.9%, ஹரியானா 43.2%, உத்திரப் பிரதேசம் 21.5%, கர்நாடகா 29.8% என்ற அளவுகளில் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளது சிஎம்ஐஇ.
இவைத்தவிர, ஜார்கண்ட் 47.1%, பீகார் 46.6%, மலை மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்தில் 2.2%, சிக்கிமில் 2.3%, உத்தரகாண்ட்டில் 6.5% என்பதாகவும் வேலைவாய்ப்பின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளால், ஏற்கனவே வீழ்ச்சி கண்டுவரும் இந்தியப் பொருளாதாரம், தற்போது கொரோனாவால் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.