சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்  இன்று  562 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,54,554 ஆகவும்,  அதிக பட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் சில வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  . மேலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  மார்ச் 8-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் அனுமதி என  உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும்,  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்  உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை வருகின்ற 8-ஆம் தேதி மூடப்படும் என்றும், மறு உத்தரவு வரும் வரை  அறை திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

இதனால்,  Law Chambers அறைகளில் உள்ள தேவையான ஆவணங்களை உடனே  எடுத்துக்கொள்ளும்படி வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.‘

வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட்டாலும், நீதிமன்ற பணிகள் வழக்கம்போல செயல்படும் எனகூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர மற்ற வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை. மற்ற வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உளள லா சேம்பர்ஸ் அறை மூடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில்தான் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.