தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி தலைவர்களுடன் கேரள முதல் பினராயி விஜயன் இன்று ஆலோசனை..

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர்  பினராயி விஜயன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என தெரிகிறது.

கேரளா மாநில அரசுமீது தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் அரசு பதவி விலக வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இடையில்,   கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது.

தினசரி 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. நேற்று  4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தொற்று பாதிப்பு 1லட்சத்து 80ஆயிரத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியவர்,  கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும், கொரோனா தடுப்பு  விதிமுறைகளை  பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில்,  மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் இன்று முதல்வர் பினராயி விஜயன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.  இதில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.