டில்லி

டிரம்ப் உலக சுகாதார மையத்துக்கு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவும் மைய ஆலோசனைகளை கொரோனா விவகாரத்தில் ஓரம் கட்டி உள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.   அமெரிக்காவில் தற்போது 4.35 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு உலக சுகாதார மையம் சரியான எச்சரிக்கை அளிக்காதது முக்கிய காரணம் என கூறி உள்ளார்.  மேலும் அவர் மையத்துக்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துவதாக மிரட்டி உள்ளார்.

டிர்ம்ப் விடுத்த மிரட்டல் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.  கொரோனா குறித்து உலக சுகாதார மைய ஆலோசகர்கள் இந்தியாவுக்கு அடிக்கடி ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.   ஆனால் தற்போது இந்திய இந்த ஆலோசனைகளைக் கவனிக்காமல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் ஆலோசனைகளை மட்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே உலக சுகாதார மையம் அளித்த ஆலோசனைகளை கடைப்பிடித்த இந்திய மாநிலங்களான கேரளா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிர உள்ளிட்ட இடங்களில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதும் இதற்கு ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே உலக சுகாதார மையம் அதிகம் கண்டுகொள்ளாத டிபி, அம்மை, போன்ற நோய்களுக்கு இந்தியா மருந்துகளைக் கண்டறிந்து அவற்றை அடியோடு ஒழித்துள்ளது.  எனவே இந்த கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஊழியர்கள் மாநிலங்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.