தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் குறித்து, பல்வேறு ஆய்வு முடிவுகள் வெளிவரும் அதேநேரத்தில், அதுகுறித்து உண்மையில்லாத கட்டுக் கதைகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை.
தற்போது, கொரோனா குறித்து உலவிவரும் 13 முக்கிய கட்டுக் கதைகள் குறித்தும், அவை தொடர்பான உண்மை குறித்தும் பார்க்கலாம்.

  1. ஷூ & செருப்பு மூலமாக கொரோனா வைரஸ் பரவும் – இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதேசமயம், வீட்டிலிருக்கும் சிறார்கள் மற்றும் குழந்தைகள் நாம் வெளியில் போட்டுவிட்டு வந்த ஷூ மற்றும் செருப்புகளை தொடாதபடி அவற்றை வைப்பது நல்லது.
  2. ஆன்டிபயாடிக்ஸ் மருந்து கொரோனாவை குணப்படுத்தும் – கொரோனாவுக்கென்று இதுவரை எந்த குறிப்பிட்ட மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேசமயம், சிலரின் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளின் பொருட்டு, சிலருக்கு ஆன்டிபாயாடிக் மருந்துகள் பரிந்துரை செய்யப்படலாமே ஒழிய, கொரோனாவுக்கான மருந்து ஆன்டிபயாடிக் அல்ல.
  3. நீண்டநாள் முகக்கவச பயன்பாடு நல்லதல்ல – சரியான முறையில் முகக்கவசத்தைப் பயன்படுத்துக‍ையில், எந்த உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை என்பதே உண்மை.
  4. கோவிட்-19 தொற்றிய அனைவருமே இறந்துவிடுவார்கள் அல்லது வென்டிலேட்டர் மூலமே குணப்படுத்த முடியும் – கொரோனா பாதித்த பெரும்பாலானோர் குணமடைகிறார்கள். வென்டிலேட்டர் பயன்பாடு என்பது குறைந்தளவு நபர்களுக்கே தேவைப்படுகிறது. உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களை தொடர்புகொள்வதே நல்லது.
  5. ஆல்கஹால் குடிப்பது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் – இதில் கொஞ்சமும் உண்மையில்லை. அதிகளவு ஆல்கஹால் சேர்க்கையானது, உங்களுக்கான ஆபத்தையே அதிகரிக்கும்.
  6. தெர்மல் ஸ்கேனர்களின் மூலம் கொரோனாவைக் கண்டறியலாம் – இதில் உண்மையில்லை. தெர்மல் ஸ்கேனர்கள் காய்ச்சலை மட்டுமே கண்டறியும். கொரோனாவைக் கண்டறியாது.
  7. கொரோனாவுக்கு மருந்து உள்ளது -கொரோனாவுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும் பரிசோதனை அளவிலேயே உள்ளன. ஹைட்ராக்ஸிகுளோரகின் உள்ளிட்ட எதுவும் கொரோனாவுக்கென்று தீர்மானிக்கப்பட்ட மருந்தல்ல.
  8. சூப்பில் மிளகு போட்டு குடிப்பது மற்றும் சூடான உணவுகளை உண்பது கொரோனாவிலிருந்து காக்கும் – இதிலெல்லாம் உண்மையில்லை. சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி முறையாக சுத்தம் செய்வது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது உள்ளிட்டவையே பாதுகாப்பு தரும்.
  9. கொசு & ஈக்களின் வழியாக கொரோனா வைரஸ் கடத்தப்படுகிறது – இவற்றில் உண்மையில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள் திரவங்கள், வைரஸ் ஒட்டியிருக்கும் பகுதியை தொட்டுவிட்டு, கைகளை அப்படியே முகத்திற்கு கொண்டுவருதல் உள்ளிட்டவைகளால் மட்டுமே வைரஸ் பரவுகிறது.
  10. உடலில் ஸ்ப்ரே அல்லது ப்ளீச் செய்துகொள்வதால் கொரோனா பரவாது – இவற்றில் உண்மையில்லை. ஆனால், இவற்றை செய்துகொள்வதால், உங்கள் உடலுக்கு தோல் தொடர்பான மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அதேசமயம், இந்தப் பொருட்களை குழந்தைகள் தொடாத வகையில் தூரத்தில் வைப்பது அவசியம்.
  11. 5ஜி மொபைல் நெட்வொர்க் மூலமாக வைரஸ் பரவுகிறது – ரேடியோ அலைகள் மற்றும் மொபைல் நெட்வொர்க் மூலமாகவெல்லாம் வைரஸ் பரவுவதில்லை. நாம் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலமே கொரோனா பரவுகிறது.
  12. நமது உடலை 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் காட்டினால் நமக்கு கொரோனா தொற்றாது – இதில் உண்மையில்லை. அதிக வெப்பநிலை கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உங்கள் கைகளை அடிக்கடி கழுவி, இதர பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றுவதன் மூலமே பரவலைத் தடுக்கலாம்.
  13. கொரோனா தொற்றிவிட்டால் குணப்படுத்தவே முடியாது – அப்படியெல்லாம் இல்லை. தொற்றுக்கு ஆளான பெரும்பாலான நபர்கள் குணம் பெற்றுள்ளனர் என்பதே உண்மை. அறிகுறிகள் தென்பட்டவுடன், தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல வேண்டும்.