சென்னை:
சென்னையில் கொரோனா அதிகமுள்ள 33 வார்டுகளில் ”நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் நோய் தொற்று இரட்டிப்பாக பெருகி வருகிறது. இதையடுத்து, இன்றுமுதல் சென்னையில் வீடுகள் தோறும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தும் திட்டம் தொடங்கி உள்ளதாக சென்னை மாநகர கொரோனா  சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தலைமையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை  12,448 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 7,672 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. மொத்தத்தில் 60 சதவிகிதம் தொற்று சென்னையிலேயே உள்ளது. இதற்கு காரணம் மக்கள் நெருக்கம் மற்றும் அரசின் உத்தரவை மதிக்காத மக்களின் மனப்பான்மை  என்று கூறப்படுகிறது.
இதையடுத்து  சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக வீடுகள் தோறும் கொரோனா சோதனை நடத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு  ”நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” என்று பெயரிடப்பட்டுஉள்ளது.
முதல்கட்டமாக பாதிப்பு அதிகமுள்ள  ராயபுரம், தண்டையார்பேட்டை,  திரு விக நகர், கோடம்பாக்கம்  பகுதிகளில் வீடுவீடாக கரோனா சோதனை நடத்தப்படுகிறது.
அத்துடன், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுரக் குடிநீர் பொட்டலங்களையும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
பரிசோதனைகளை மேற்கொள்ள கூடுதலாக 500 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து உடல்வெப்ப பரிசோதனை   நடத்தவும் மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.