சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில்,  தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40 பேருக்கு தொற்று உறுதியானது.  சென்னையில் 8 மண்டலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல வாரங்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500 க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தேர்தல் பிரசாரக்கூட்டம் காரணமாக தொற்றுபரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 2.41 லட்சமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 184 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 744 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்கள்.

சென்னையை அடுத்து  செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 15 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 886 பேருக்கும் தொற்று அதிகரித்து வருகிறது.  தஞ்சை மாவட்டமும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நோய் பரவல் ஏற்பட்டுள்ள தஞ்சை மாவட்டத்தில் 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் திருப்பூரில் புதிதாக 321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நோய் பரவல் வேகமாக இருப்பதையே காட்டுகிறது

இந்த நிலையில், ஐடி நிறுவனங்கள் அதிகம் உங்ளள பெருங்குடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தது சுகாதாரத்துறை. அவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தை உடனே மூட அறிவுறுத்தினர். இதையடுத்து,  அந்நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் குறைந்து இருந்த கொரோனா நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து உள்ளது. இதில் தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 377 பேர் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். இதேபோல் திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் நோய் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.

பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். காய்ச்சல் முகாம்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதிகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு:-

மணலி- 26.

மாதவரம் – 99.

தண்டையார் பேட்டை -134.

ராயபுரம் – 258.

அம்பத்தூர் -211.

அண்ணாநகர் – 311.

தேனாம்பேட்டை – 377.

கோடம்பாக்கம் – 282.

வளசரவாக்கம் – 190.

ஆலந்தூர் – 126.

அடையாறு – 188.

பெருங்குடி – 121.

சோழிங்கநல்லூர் – 65.

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம், கிண்டி, ஸ்டான்லி, ஓமந்தூராா் என முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் நிரம்பியுள்ளது.

இதுகுறித்து  கூறிய சுகாதாரத் துறை அதிகாரிகள்,  சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கூடுதலான கவனத்துடன் இருத்தல் அவசியம். முகக்கவசம் அணிதல், நோய்த் தடுப்புக்கான நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இணை நோய்கள் உள்ளவா்கள், அறிகுறி உள்ளவா்களை அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பது பாா்க்க முடிகிறது. இது நோய்ப் பரவலை மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே,மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் மிகவும் முக்கியம் என்று  அறிவுறுத்தியுள்ளனர்.