கொரோனா தீவிரம்: மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு…

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதையொட்டி,  கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மண்டலங் களில் தீவிர  நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,837 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15,790 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 804 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து,  மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மம்தா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,  குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கு முடக்கப்படுவ தாகவும், மாநில உள்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.