டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது விரைவில் முழு ஊரடங்காக மாறும் என்ற அச்சத்தால், பல மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே  தொற்று பரவல் புதிய உச்சத்தை  எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,26,789 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  685 பேர் பலியாகினர். இது பதற்றத்தை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிரா,  குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் அச்சமடைந்த உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த புலம் தொழிலாளர்கள், மாணவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் உள்ள ரயில் மற்றும் பேருந்து  நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மீண்டும் கொரோனா பரவல் காரணமாக தங்களுக்கு சரியான வேலை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதனால் சொந்த ஊருக்கே போகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளனர். அதுபோல சென்னையில் இருந்து  வெளியேறும் வெளி மாநில தொழிலாளர்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவை வழங்கி, அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு (2020) கோரோனா பரவல் தீவிரம் காரணமாக திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தும், சைக்கிளிலும், இருசக்கர வாகனங்களிலும் பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த சொந்த ஊர்களுக்கு திரும்பிய அவலம் ஏற்பட்டதால், இந்த முறை முன்கூட்டியே  சொந்த ஊர்களுக்கு செல்வதில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.