கொரோனா தீவிரம்: சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமனம் – விவரம்…

சென்னை:

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட   15 மண்டலங்களுக்கு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகஅரசு  சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமித்து உத்தரவிட்டு, அவர்களின் ஒருங்கிணைப்பாளராக  சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இருப்பார் என்று அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அரசின் வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட மண்டல சிறப்பு பணிக்குழுக்களை நியமித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட களப் பணிக்குழுக்கள், சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, சேலம் ஆகிய மாநகராட்சிகளில் நியமிக்கப்பட்டன.

இந்த மாநகராட்சிகளில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வது, அங்கு தேவையான சேவைகளை ஆற்றுவது, தொற்றுள்ள நபர்களை தேடுவது மற்றும் பரிசோதிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த குழு செய்யும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக சென்னை மாநகராட்சியின் சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை நியமித்து அரசு ஆணை பிறப்பித்தது.

4 மாவட்டங்களுக்கு களப்பணி குழு

பின்னர் தற்போதுள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் அரசு பரிசீலனை செய்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான களப் பணிக்குழுக்களை மாற்றி அமைத்து அரசு உத்தரவிடுகிறது.

மற்ற மாவட்டங்களில், அங்குள்ள மாவட்ட கண்காணிப்பு அதிகாரியே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலாண்மை செய்வார்கள்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் சிறப்பாக மேலாண்மை செய்யப்படுவதையும், மருத்துவ பரிசோதனைகள், தொற்றுகளை தடமறிதல், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை நிர்வாகம் ஆகியவற்றை களப்பணிக் குழு உறுதி செய்யும்.

சென்னையில் நோய் பரவுவதை கட்டுப்படுத்த, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் இணைந்து சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி செயல்படுவார்.

அந்த வகையில், சென்னை வடக்கு மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. (செயலாக்கம்) மகேஷ்குமார் அகர்வால்,

கிழக்கு மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. (பொருளாதார குற்றப்பிரிவு) ஆபாஷ்குமார்,

தென் மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. (தமிழ்நாடு போலீஸ் அகடமி) அம்ரேஷ் பூஜாரி,

மேற்கு மண்டலத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு) அபய்குமார் சிங் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை மண்டல குழுக்கள்

பணிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள தலைமையகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், சென்னை தலைமையக போலீஸ் துணை கமிஷனர் எஸ்.விமலா, பொது சுகாதார முன்னாள் துணை இயக்குனர் ராஜசேகர் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை மண்டல குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் வருமாறு:-

 1ம் மண்டலத்துக்கான குழுவில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் சி.காமராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆதிமூலம்;

2ம் மண்டலத்துக்கான குழுவில் ஊரக மேம்பாட்டு மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் இயக்குனர் அமர் குஷாவா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீவநாதம்,

3ம் மண்டல குழுவில் கால்நடை பராமரிப்பு இயக்குனர் ஏ.ஞானசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய ரவீந்திரன், டாஸ்கோ பொது மேலாளர் விஜயா, சி.எம்.ஏ. துணை இயக்குனர் சங்கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

4ம் மண்டல குழு–டிட்கோ செயல் இயக்குனர் கே.பி.கார்த்திகேயன், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு மல்லிகா, அண்ணா மேலாண்மை நிறுவன டி.ஆர்.ஓ. செந்தில்குமார், உணவு பாதுகாப்பு துணை இயக்குனர் செந்தில்.

5ம் மண்டல குழு–டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார், சிலை தடுப்பு சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டு ராஜேஸ்வரி, சிறப்பு டி.ஆர்.ஓ. சிவருத்ரயா, டான்சாக்ஸ் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல்.

6ம் மண்டல குழு–டி.என்.ஆர்.எஸ்.பி. திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், சைபர் செல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி, டி.என்.ஆர்.டி. திட்ட துணை தலைமை செயல் அலுவலர் அருணா, வி.பி.டி.சி. இணை இயக்குனர் கிருஷ்ணராஜ்.

7ம் மண்டல குழு–ஆதி திராவியர் நலன் ஆணையர் சி.முனியநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன்.

8ம் மண்டல குழு–டி.என்.எஸ்.சி.பி. இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.கோபால சுந்தரராஜ், போதைத் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டு கலைச்செல்வன், தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகி ஜெய்னுலாப்தீன், ஐ.வி.சி.இசட். இணை இயக்குனர் சேரன்.

9ம் மண்டல குழு–நகரம் மற்றும் ஊரக அமைப்பு இயக்குனர் சந்திரசேகர் சகாமுரி, சி.சி.ஐ.டபுள்யூ. போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி, டி.என்.டி.பி.ஓ. மேலாண்மை இயக்குனர் சுப்புலட்சுமி, ஆரம்ப சுகாதார மைய இணை இயக்குனர் தேவபார்த்தசாரதி.

10ம் மண்டல குழு–டான்ஜெட்கோ இணை மேலாண் இயக்குனர் எஸ்.விநீத், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மீனா, ஐ.எம்.எம். இணை இயக்குனர் சேகர்.

11ம் மண்டல குழு – சமக்ர சிக்‌ஷா கூடுதல் மாநில திட்ட இயக்குனர் என்.வெங்கடேஷ், போதைத் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு துணை சூப்பிரண்டு ரியாசுதீன்,

12ம் மண்டல குழு – சென்னை அருங்காட்சியக ஆணையர் எம்.எஸ்.சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரநாராயணன்.

13ம் மண்டல குழு – பெண்கள் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா, துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஆர்.யு.எஸ்.ஏ. திட்ட மேலாளர் கண்ணபிரான், ஐ.வி.சி.இசட். இணை இயக்குனர் சேரன்.

14ம் மண்டல குழு – கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் டி.என்.வெங்கடேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ்.

15ம் மண்டல குழு – கைத்தறி மற்றும் ஜவுளி இயக்குனர் எம்.கருணாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார்.

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொல்லியல்துறை ஆணையர் டி.உதயசந்திரன், சிலை கடத்தல் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி. அன்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், ரெயில்வே ஐ.ஜி. வனிதா, காஞ்சீபுரம் மாவட்டத்தில் டி.என்.எஸ்.இ.சி. செயலாளர் எல்.சுப்ரமணியன், கடலோர பாதுகாப்பு குழும ஐ.ஜி. கே.பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.