பெங்களூரு: கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கர்நாடகம் கேரள மாநிலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் முழு ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு- ஜூன்மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி , கடந்த மே 10ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 24ம் தேதியுடன் நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு காலக்கட்டத்தில் முந்தைய அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும் என்றும், பேருந்து போக்குவரத்து, பெங்களூர் மெட்ரோ உள்ளிட்டவை இயங்காது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கட்டுக்குள் வராததையடுத்து ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விதிக்கப்பட்ட மும்மடங்கு கடுமையான ஊரடங்கு கைவிடப்பட்டு வழக்கமான ஊரடங்காக அமலில் இருக்கும். மல்லபுரத்தில் மட்டும் மும்மடங்கு கடுமை நீடிக்கும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.<
கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.