கொரோனா தீவிரம் – லாக்டவுன்: அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், இரவு மற்றும் ஞாயிறன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை கட்டுப்பபடுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காத நிலை எழுந்துள்ளது. பல நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, தொற்று பரவலை கட்டுப்படுத்த  தமிழகத்தில் இன்று முதல் இரவு 10மணி முதல் அதிகாலை 4 மணியிலான ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருஐகின்றன.

இந்த நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் மேலும்,  கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றி தலைமைச் செயலாளர் மதத்தலைவர்களின் ஆலோசனை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட இதர துறைகளின் உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன்  நேற்று கோவிட்  கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசின் அமைச்சரவை செயலாளரின் வீடியோ மாநாட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.