அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், ஏப்ரல் 20ம் தேதி நிலவரப்படி, அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் மேல். ஆனால், அந்நாட்டின் மொத்த மக்கள்தொகை 330 மில்லியன் (33 கோடிகள்).

அதேசமயம், மேற்கு ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகை என்னவெனில், தோராயமாக 32 கோடிகள். (அமெரிக்காவை விட சற்று குறைவு). இந்த 5 நாடுகளிலும் நிகழ்ந்த கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஏப்ரல் 20ம் தேதி நிலவரப்படி மொத்தம் 85,000. அதாவது, ‍அமெரிக்காவில் நிகழ்ந்த மரணங்களைவிட இரண்டு மடங்கு அதிகம்.

எனவே, தனிநபர் புள்ளிவிபரங்கள் பொதுவாக உண்மையைப் பேசுவதில்லை.

இறப்புகளைக் கணக்கிடும் முறை

கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களை கணக்கிடுவதில் நாடுகளுக்கிடையே பல வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, பிரான்ஸ் நாட்டை எடுத்துக்கொண்டால், பராமரிப்பு இல்லங்களில்(care homes) நிகழும் மரணங்களையும் கணக்கில் கொண்டு வருகின்றனர். ஆனால், பிரிட்டனில் மருத்துவமனையில் நிகழும் மரணங்களை மட்டுமே கணக்கில் கொண்டு வருகின்றனர்.

அதாவது, கொரோனா மரணங்களைக் கணக்கிடுவதில், உலகம் முழுவதும் ஒரேவிதமான ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை பின்பற்றப்படுவதில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது.

ஒருவர் உண்மையாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால்தான் அவர் நோயாளியாக கணக்கிடப்படுவாரா? அல்லது மருத்துவரின் சந்தேகமே போதுமானதா? ஒருவரின் மரணத்திற்கு, கொரோனா வைரஸ் முதன்மை காரணியாக இருந்தால் மட்டுமே அது கொரோனா மரணமாக கணக்கிடப்படுமா? அல்லது மரணச் சான்றிதழே போதுமானதா?

மரண விகிதங்கள்

மரண விகிதங்களைக் கணக்கிடுவதிலும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

பிரிட்டனை எடுத்துக்கொண்டால், மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு உடல்நலன் பாதிக்கப்பட்ட நபர்களே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனால், பரந்தளவிலான சோதனை முறைகளைப் பின்பற்றும் நாடுகளைவிட, பிரிட்டனில் மரண விகிதங்கள் அதிகமாக தெரியும்.

அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொள்ளும் நாடுகளில், சிறியளவிலான அறிகுறிகள் கொண்ட அல்லது அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுவார்கள்.

பெரும்பான்மையான நோயாளிகள் கண்டறியப்படுவதில்லை

இந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளிடையே நேரும் மரண விகிதம், ஒட்டுமொத்த மரண விகிதத்தோடு ஒத்திருப்பதில்லை.

மற்றொரு அளவீடு என்னவெனில், ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தன – அதாவது, 10 லட்சம் மக்களுக்கு, எத்தனை மரணங்கள் நிகழ்ந்தன என்ற அளவீடாகும்.

கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில், ஒரு நாட்டில் அதன் மூலமான மரணம் நிகழ்ந்திருந்தால், அங்கே இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க நீண்டகாலம் பிடித்திருக்கும்.

பிற்பாடு காலத்தில் 50 மரணங்களை சந்தித்துள்ள ஒரு நாடு, கொரோனா வைரஸை சரியாக எதிர்கொள்வதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும் மற்றும் அதன் இறப்பு எண்ணிக்கையை குறைக்கவும் அதிக காலம் தேவைப்படும்.

இந்த ஒப்பீடுகளை ஆராயும்போது, அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் குணமடைவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் காரணிகள்

அரசியல் ரீதியான அதிக கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகள் வெளியிடும் தரவுகள் எப்போதுமே நம்புவதற்கு கடினமானவைதான். உதாரணமாக, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் சார்பாக வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கைகள் எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவ‍ை என்பது நமக்குத் தெரியாது.

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில், வைரஸ் வெளியான வூஹானில், இறப்பு எண்ணிக்கை மாற்றி அறிவிக்கப்பட்ட பின்னரும், விபரங்கள் நம்பத்தகுந்தவையா? என்ற கேள்வி எழுகிறது.

மக்கள்தொகை காரணிகள்

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மக்கள் பெருக்கம் மற்றும் மக்கள் அடர்த்தி போன்றவை, கணக்கீடுகளை சிக்கலாக்குகின்றன. உதாரணமாக, இங்கிலாந்தையும் அயர்லாந்தையும் எடுத்துக்கொண்டால், அயர்லாந்தில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள். ஆனால், இங்கிலாந்து நகர்மயமான ஒரு நாடாகும்.

இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளாகும். மேலும், ஐரோப்பாவையும் ஆப்ரிக்க கண்டத்தையும் ஒப்பிடுவதும் சரியாக இராது. ஏனெனில், ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்க மக்கள்தொகையில் இளம் வயதினர் அதிகம்.

எனவே, நமது ஒப்பீடுகள், ஒரேமாதிரியான அம்சங்களைக் கொண்டு அமைவது முக்கியம்.

வேறுபட்ட மருத்துவ வசதிகள்

கொரோனா தாக்க ஒப்பீடுகளில், மருத்துவ வசதிகளும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஆப்ரிக்காவோடு ஒப்பிடுகையில், ஐரோப்பாவின் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பானது.

சிறப்பான மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளில், கொரோனா வைரஸ் பரவல் நன்றாக கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், சுகாதார வசதிகள் சிறப்பாக இல்லாத மற்றும் ஏழை நாடுகளில், சர்க்கரை வியாதி, இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கொண்ட மக்கள் அதிகம் இருப்பார்கள்.

எனவே, அத்தகைய நாடுகளில் இந்த நோய் பரவுகையில், மரண விகிதங்கள் அதிகம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, பரவலான மற்றும் அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொண்ட நாடுகள், நோயின் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியிருக்கும். தென்கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அதேசமயம், பரிசோதனை கணக்கீட்டிலும் வேறுபாடுகள் உள்ளன. சில நாடுகள், பரிசோதனைக்கு உட்பட்ட நபர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், வேறுசில நாடுகளில் பரிசோதனை செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சில நபர்களுக்கு, தொற்றை உறுதிசெய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் அவசியம்.

அதேசமயம், இத்தாலியில் அதிக பரிசோதனைகள் நடைபெற்றும் அங்கே மரண எண்ணிக்கை அதிகம் என்பது உண்மைதான் என்றாலும், நிலைமை மோசமான பிறகே, அங்கே அத்தகைய நடவடிக்கை முடுக்கப்பட்டது என்பதும் உண்மை. பிரிட்டனிலும் இதே கதைதான்.

ஒப்பீடுகள் கடினமானவை

இந்த ஒப்பீடுகளின் நோக்கம் என்னவெனில், சிறப்பாக செயல்படும் ஒரு நாட்டைப் பார்த்து, இன்னொரு நாடு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதுவரை, பரிசோதனை மட்டுமே மிகவும் வெளிப்படையான உதாரணமாக தெரிகிறது.

அதேசமயம், இந்த வைரஸ் தொற்றுப் பிரச்சினை ஓய்ந்து, உலகம் முழுவதும் நிலைமை சகஜ நிலைக்குத் திரும்பும் வரை, எந்த நாடு சிறப்பாக செயல்பட்டது என்று மதிப்பிடுவது கடினமே!

மேலும், அப்போதுதான், அடுத்த ஆபத்தை எதிர்கொள்வதற்கான பாடத்தையும் கற்றுக்கொள்ள முடியும்.

 

– மூலக் கட்டுரை: கிறிஸ் மோரிஸ் & அந்தோணி ரூபென்

– தமிழில்: மதுரை மாயாண்டி