டில்லி

நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மருத்துவ நிபுணர்களுடன்  காணொளி மூலம் கலந்துரையாடல் நடத்தி உள்ளார்.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு உலகின் பல வேறு துறை நிபுணர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார்.   இந்த நிகழ்வுகள் இணையத்தில் நேரடியாக ஒளிபர்ப்பபடுகிறது.   அவ்வகையில் நேற்று மூன்றாம் அத்தியாயமாக உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஆஷிஷ் ஜா மற்ற்ய்ம் ஐரோப்பிய நோய்த்தடுப்பு மைய விஞ்ஞானி ஜோகன் ஜீசெக் உடன் உரையாடினார்.

அந்த உரையாடலின் போது ஆஷிஷ் ஜ, “இன்னும் ஓராண்டுக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்படும்  பெரியளவில் கொரோனா பரிசோதனைகள் நடந்தாக வேண்டும்.  அப்படி நடந்தால் தான் பொது முடக்கத்துக்குப் பிறகு மக்களிடையே நம்பிக்கை ஏற்படும்.  இந்த கொரோனா வைரஸ் என்பது 12-18 மாத பிரச்சினையாகும். எனவே 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு உலகம் கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வெளி வராது” எனத் தெரிவித்தார்.

ஜோகன் ஜீசெக், “கொரோனாவுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் தற்போது பொருளாதார சரிவு அதிகமாக உள்ளது.  எனவே மென்மையான ஊரடங்கை இந்தியாவில் கடைப்பிடிக்க வேண்டும்.  தற்போது நாடு உள்ள நிலையில் மென்மையான ஊரடங்கு மட்டுமே அவசியமாகும்.    தீவிர ஊரடங்கை இந்தியாவில் அமல் படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் பேரழிவு அடைய வழி வகுக்கும்” என எச்சரித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது ராகுல் காந்தி கொரோனா பாதிப்பு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.  ராகுல் காந்தி, “மக்களின் வாழ்க்கையை கொரோனா தாக்குதல் அப்படியே புரட்டிப் போட்டுள்ளது.   அமெரிக்காவில் 9/11 என அழைக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தாக்குதல் ஒரு புதிய அத்தியாயம் ஆகும்.   ஆனால் கொரோனா பாதிப்பு என்பது ஒரு புதிய புத்தகம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.