கொரோனா: புனேவில் 25% ஊழியர்களுடன் இயங்கும் ஐடி நிறுவனங்கள்

புனே

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ள நிலையில் புனே ஐடி நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன.

உலகெங்கும் உள்ள மக்களை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.  இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவில் பாதிப்புக்கள் உள்ளன.  இதையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து பணிக்கங்களும் மூடப்பட வேண்டும் எனவும் வீட்டில் இருந்து பணி புரிய அனைத்து ஊழியர்களையும் அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புறாவில் ஏராளமான ஐடி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  நேற்று புனே மாவட்ட ஆட்சியர் நாவல் கிஷோர் ராம் செய்தியாளர்களிடம், “கொரோனா வைரஸால் பணியகங்கள் மூடப்பட்டாலும் ஐடி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   இந்த ஐடி  நிறுவனங்கள் மூலம் வங்கி மற்றும் சுகாதார அமைப்புக்கள் பணி நடப்பதால்  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளை பொறுத்தவரையில் கொள்ளை நோய் விதிகள் குறித்து குழப்பங்கள் உள்ளன.  நாங்கள் தொழிற்சாலைகளை அத்தியாவசியமானவை மற்றும் அத்தியாவசியம் அற்றவை என இரு பகுதிகளாகப் பிரித்துள்ளோம்.  இதில் அத்தியாவசியமானவை எனப்படும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும்.

வங்கிகள் மற்றும் சுகாதார அமைப்புப் பணிகள் அத்தியாவசியப் பணிகளின் கீழ் வருகின்றன.  இவை அனைத்தையும் ஐடி நிறுவனங்கள் இயக்குவதால் ஐடி நிறுவனங்களும் அத்தியாவசியம் ஆகி உள்ளது.   எனவே இந்த ஐடி நிறுவனங்களை 25% ஊழியர்களைக் கொண்டு நடத்தலாம் என நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.