இந்தியாவின் கோயில் பொருளாதாரத்தைப் பதம் பார்த்த கொரோனா ஊரடங்கு!

இந்தியாவில் முறையான திட்டமிடுதல் எதுவுமில்லாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கால், இது அது என்றில்லாமல், எல்லா தொழில்களும் அடிவாங்கியுள்ளன. அதாவது, மிக முக்கியமாக, அமைப்பு சாரா தொழில்கள்!

இதுகுறித்து கட்டுரையாளர் அனுராதா நாகராஜ் கூறுவது; இந்தியாவின் ஒட்டுமொத்த மனிதவளத்தில், 90% பேர் அமைப்புசாரா பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். அதாவது, தொழிலாளர் நலச் சட்டங்களின் வாயிலாக எந்தப் பாதுகாப்பையும் பெறாதவர்கள்.

இந்த கொரோனா ஊரடங்கால் இந்தியாவின் கோயில் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மலரில் தொடங்கி, ஊதுபத்தி முதல் எண்ணெய் விளக்குகள் வரை பல்வேறு பூஜை அலங்காரப் பொருட்களின் விற்பனை, ஆன்மீக சுற்றுலா உள்ளிட்டவை பெரியளவில் அடிவாங்கியுள்ளன.

இந்தியாவின் கோயில் பொருளாதாரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியாற்றுகிறார்கள். இதன் மதிப்பு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தொடர் ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் இதுவரை கண்டிராத பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

இந்த மாபெரும் நெருக்கடியால், அடுத்துவரும் மாதங்களை எப்படி திட்டமிடுவது மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது புரியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளனர் என்கிறார் கட்டுரையாளர்.