நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கால், இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வரை கடும் வறுமையில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான மிக மோசமான தற்போது ஏற்பட்டுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில், வர்த்தகம் மற்றும் தொழிலாளர்கள் என இருதரப்பும் பேரழிவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகில், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 40 கோடி பேருக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இவர்களில், பல லட்சம் பேர் இப்போதே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளில் ஊரடங்கின் காரணமாக, அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், 90% பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளதால், சுமார் 40 கோடி பேர், கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் வறுமையில் சிக்குவர். தற்போதைய நிலையால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களில் பலரும், சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.