கொரோனா ஊரடங்கு பொருளாதாரம் – உண்மை நிலைதான் என்ன?

கடந்த மார்ச் பிற்பகுதியிலிருந்து தற்போது வரை, தமிழத்தில் கொரோனா ஊரடங்கு பல வடிவங்களிலும் தொடர்ந்து கொண்டுள்ளது. பல தொழில்கள், குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கியதால், ஏராளமானோர் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்று கூறப்பட்டது.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்கூட, சில நாட்களில் கூட்டம் குறைந்து ஈயடிப்பதாகவே தகவல்கள் வெளியாகின. வழக்கமான விவசாயப் பணிகளைத் தவிர்த்து, அன்றாடம் காய்ச்சிகளுக்கான பல தொழில்கள் நடைபெறாமல் போனதால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதாகவும் அறிக்கைகள் குறிப்பிட்டன.

பல தனியார் நிறுவனங்கள், பெரியளவிலான பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், பல நிறுவனங்கள் பாதி சம்பளம் மட்டுமே வழங்குவதாகவும், வேறுபல நிறுவனங்களில் சம்பளம் நிறுத்தி வைத்திருப்பதாகவும்கூட செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படியானதொரு பொருளாதார நெருக்கடியில், நாட்டில் அத்தியாவசியமற்ற துணிகள், அணிமணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை 80% வீழ்ச்சியடைந்துவிட்டதாக கூறுகிறார்கள். மேலும், மளிகை மற்றும் மருந்துகள் போன்ற மிகுந்த அத்தியாவசியமான பொருட்களின் விற்பனையிலும் 40% சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார முடக்கம் காரணமாக, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில், விற்பனையும் சரிந்துவிட்டது என்பதில் லாஜிக் இருக்கிறதுதான். ஆனால், இந்தப் புள்ளிவிபரங்களெல்லாம் உண்மைதானா? என்று சந்தேகிக்கும் வகையில், நடைமுறை நிகழ்வுகள் கேள்வியெழுப்புகின்றன.

ஏனெனில், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உள்பட, பல பொருட்களின் விலையேற்றம் மற்றும் வியாபாரிகளின் மனப்போக்கு உள்ளிட்டவை குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன

சிறிய ஊர்களில் உள்ள பல கடைக்காரர்கள் தேவையான சரக்கே வருவதில்லை என்கின்றனர். இந்தக் காரணம் அந்த ஊர்களுக்குப் பொருந்தலாம்தான். ஆனால், பெரிய ஊர்களுக்கு நிச்சயம் பொருந்தாது. ஏனெனில், அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு லாரி போக்குவரத்துக்கு எப்போதும் தடை விதிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், சரக்குப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை.

ஆனாலும், பல அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்துள்ளன. பதுக்கல், செயற்கையான தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்டவை வியாபார உலகில் எப்போதுமே சகஜமான ஒன்று. ஆனால், மக்களிடம் பணப்புழக்கமே இல்லை என்று கூறப்படும் ஒரு நெருக்கடியான சூழலில், இத்தகைய விலையேற்றங்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையுமே ஏற்படுத்துவதாக உள்ளன.

சாதாரண வெகுமக்கள், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில், மளிகைப் பொருட்கள் விலையேறினால், அது நிச்சயமாக அப்படியே கடந்துபோகக்கூடிய ஒன்றல்ல. அந்த விஷயம் அரசினால் கவனிக்கப்பட்டு, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், அப்படியான நிலையிலா இந்த அரசு இருக்கிறது? என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கையே.

அத்தியாவசியப் பொருட்கள் விஷயத்தில் நிலைமை இப்படியென்றால், அத்தியாவசியமற்ற துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், செருப்புகள் மற்றும் இதர பயன்பாட்டுப் பொருட்களை விற்பனை செய்வோரின் மனநிலையும், ஆச்சர்யகரமானதாகவே உள்ளது. பல இடங்களில், ‘வாங்கினால் வாங்கு… இல்லையென்றால் போய்க்கொண்ட இரு’ என்பதாகவே அவர்களின் மனநிலை உள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை 40% மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனை 80% சரிந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் கூறும் நிலையில், சரிந்த விற்பனையை நிமிர்த்தும் வகையில்தான் வியாபார நடவடிக்கைகள் அமையும். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகப் போய்க்கொண்டுள்ளது.

இறைச்சியின்(குறிப்பாக ஆடு & கோழி) விலைகள் தாறுமாறாக எகிறியுள்ளன. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் போய், வாங்கும் சக்தி குறைந்துவிட்டது என்பதை வியாபாரிகள் நம்பவில்லையா? அல்லது கடந்த 6 ஆண்டுகளாக மோடியின் பலவித கடுமையான பொருளாதார தாக்குதல்களையும் மீறி, பலமாத பொருளாதார முடக்கத்தையும் எளிதாக கையாளும் வகையில் சேமிப்புத்திறனைப் பெற்றுள்ளார்களா நம் மக்கள்? என்ற வாதங்களெல்லாம் எழுகின்றன.

எது எப்படியோ, தற்போது வெளியாகும் பொருளாதார நிலை குறித்தப் புள்ளி விபரங்களுக்கும் நடைமுறை வணிக நிகழ்வுகளுக்கும் முரண்பாடுகள் இருப்பதானது, கண்கூடாக காணக்கூடிய விஷயமாகவே உள்ளது!