சென்னை

கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும் சளி இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடெங்கும் கொரோனா உள்ளதா என்பதை பிசிஆர் சோதனை மூலம் உறுதிப் படுத்தப்பட்டு வருகிறது.   இந்த சோதனையில் மூக்கின் உள்ளே ஒரு குச்சி செருகப்பட்டு, சளி மாதிரிகள் சேர்க்கப்பட்டு அவற்றைச் சோதனை செய்யப்படுகிறது.   இந்த சோதனையின் முடிவு பாசிடிவ் ஆக இருந்தால் கொரோனா உறுதிப் படுத்தப்படுகிறது.

ஆனால் மருத்துவர்கள் தற்போது கொரோனா தொற்றை உறுதி செய்ய பிசிஆர் சோதனை நடந்தாலும் அதில் நெகடிவ் என வந்தால் தொற்று இல்லை என இருக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து நுரையீரல்  மருத்துவர் ஜெயராமன் , “பிசிஆர் சோதனையில் நெகடிவ் வந்தாலும் சளி, மூச்சுத் திணறல், இருமல் கடுமையாக இருந்தால் அவர்களுக்கு சிடி ஸ்கேன் மூலம் தொற்றை உறுதி செய்ய முடியும்.  இத்தகைய நோயாளிகளுக்கு என அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் உள்ளன.

குறிப்பாக பிசிஆர் சோதனையின் போது அந்த குச்சி மூக்கின் உள்ளே 10 விநாடிகளாவது இருக்க வேண்டும்.   இவ்வாறு மாதிரி எடுக்கும் போது எடுக்கப்படுபவருக்கு சிரமம் உண்டானால் மட்டுமே சரியாக மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாகப் பொருள் ஆகும்.   சரியான முறையில் மாதிரிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லா விட்டால் சோதனை முடிவு நெகடிவ் எனக் காட்டும்.” என தெரிவித்துள்ளார்.

 இதைப் போல் மற்றொரு நுரையீரல் மருத்துவரான அனந்த சுப்ரமணியன், “பிசிஆர் சோதனை மாதிரிகளைச் சரியாக எடுத்தாலும் 70% வரை மட்டுமே பாசிடிவ் என முடிவு வரும்.  ஆகவே நெகடிவ் வந்து இருமல், சளி  மூச்சுத் திணறல் உள்ளோர் அவசியம் சிடி ஸ்கேன் செய்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் மற்ற நுரையீரல் பாதிப்புக்கும் கொரோனா பாதிப்புக்கும் உள்ள வித்தியாசம் சி டி ஸ்கேனில் நன்கு தெரிய வரும்.” என தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்,”பலருக்கு பிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் சி டி ஸ்கேன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  எனவே இவர்களுக்காக 120 படுக்கைகளுடன் தனி வார்டு ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்டுள்ளது.   எனவே சோதனையில் நெகடிவ் இருந்தாலும் சிடி ஸ்கேன் செய்வது அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.