ஜெனிவா

கொரோனா தொற்று மீண்டும்  உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது அனைத்து உலக நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது.   இதுவரை 56.84 லட்சத்துக்கும் மேற்பட்டோரைப் பாதித்த கொரோனா வைரஸ் 3.92 லட்சத்துக்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கி உள்ளது.   அமெரிக்கா, பிரேசில் ரஷ்யா, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் தொற்று உச்சத்தில் உள்ளது

உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக் ரயான், “உலகம் இதுவரை கொரோனா வைரஸின் முதல் கட்ட தாக்குதலின் மத்தியில் உள்ளது.  ஒரு சில நாடுகளில் தொற்று குறைந்து வரும் வேளையில் வேறு சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது.  தொற்று நோய்கள் கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வருவதைப் போல் மறு தாக்குதல் நடத்துவது வழக்கமாகும்..

தற்போது முதல் நோய்த் தொற்று அலை ஓய்ந்த இடங்களில் இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் இரண்டாம் அலை தாக்குதல் நிகழலாம்.  நாம் இப்போதே கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யாவிட்டால் இரண்டாம் அலையில் தொற்று விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ளது.   இது பல நாடுகளில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிகழ வாய்ப்பு உள்ளது.

தற்போது முதல் அலை தணிந்து வருவதால் இரண்டாம் அலைக்குப் பல மாத அவகாசம் இருப்பதாக எண்ண முடியாது.  அனேகமாக இந்தமுதல் அலையிலேயே மீண்டும் உச்சநிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.   ஆகவே ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பொது சுகாதாரம், பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர வேண்டும். இரண்டாம் உச்சநிலை உடனடியாக ஏற்படுவதைத் தடுக்க தேவையான விரிவான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.