சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்  என தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,84,094 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், 14,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 12, 700 பேர்  கொரோனா பாதிப்பு காரணமாக மரணத்தை தழுவி உள்ளனர்.  கடந்த ஆண்டு இறுதி முதல் குறைந்து வந்த கொரோனா  பரவல் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரிக்ககத் தொடங்கி உள்ளது.  இது கொரோனா பரவலின் 2வது அலை என விமர்சிக்கப்படுகிறது.  தமிழகத்திலும் தொற்று வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பபட்டு வருகின்றன. ஆனால், தேர்தல் பிரசார காலம் என்பதால், முறையான நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கிண்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கொரோனா பரவலை தடுக்க தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள் என பொதுமக்களும், அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அரசியல் தலைவர்கள், அவர்களின் தொண்டர்களை முகக்கவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும் என்று கூறியவர்,  தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில், மருத்துவ பணியாளர்கள் போர் வீரர்கள் போல்  மக்களுக்காக சேவையாற்றி வருகிறார்கள் என்றார்.

மேலும், தமிழகத்தில்,  மதக்கூட்டம், உள் அரங்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் கொரோனா பரவுகிறது.  இதுவரை கொரோனா இறப்பு இல்லாத வகையில்,  இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றவர், பொதுமக்கள் முக்கவசம் அணியுங்கள் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

தொற்று அதிகரிப்பு காரணமாக, பொதுத்தேர்வு மையங்கள், வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் தவிர்த்து பிற பள்ளிகள், கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.