பெங்களூரு: தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை  என  கர்நாடக அரசு  தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  தொற்று தீவிரமடைந்து வருவதால்,  பெங்களூரு வரும் அண்டை  மாநிலத்தவர்கள், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கடந்த வாரம் கர்நாடக அரசு அறிவித்தது.  இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் குறித்து,  பெங்களூரு விக்டோரியா  மருத்துவமனையில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.    கொரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களான  மகாராஷ்டிரா கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் ரானா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உள்பட  மற்ற  மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரேனா சான்றிதழ் தேவையில்லை.

இவ்வாறு  அவர் கூறினார்.