சென்னை: தமிழக சட்டமன்றம் 14ந்தேதி கூட உள்ள நிலையில், சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் உள்பட பலருக்கு கொரோனா நெகடிவ் என சோதனை முடிவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக  தமிழக சட்டமன்ற கூட்டம் நடை பெறாமல் இருந்து வந்தது. தற்போது ஓரளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. பாதுகாப்பு கருதி, இந்த சபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் சமுக விலகளுடன் நடைபெற உள்ளது.
முன்னதாக சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும், சபாநாயகர், முதல்வர் உள்பட அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும், சட்டமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் சோதனை முடிவு நெகடிவ் என்று வந்தால் மட்டுமே சபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, நேற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களது வீட்டிற்கே சென்று கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.
இந்த சோதனையின் முடிவுகள் தற்பொது வெளியாகி வருகிறது. அதன்படி,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற  சபாநாயகர் தனபால், திமுக தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான  மு.க.ஸ்டாலின் உள்பட பல அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கொரோனா  தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 இரண்டு பேருக்கு மட்டும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. ஒருவர் சட்டசபை செயலக ஊழியர், மற்றொருவர் முதலமைச்சர் அலுவலக ஊழியர் என்ற தகவல் வந்துள்ளது.