புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக, உலகளவில் பிறப்பு விகிதத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 90 ஆய்வுளை, புகழ்பெற்ற 12 விஞ்ஞானிகள் ஆய்வுசெய்தனர். இதனடிப்படையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக, திட்டமிடப்பட்ட கர்ப்பங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதால், பிறப்பு விகிதம் பெருமளவில் குறையும். மேலும், பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டதும் இதற்கு காரணம்.
கொரோனா காலத்தில், பணிசெய்த பெண்கள்கூட, தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவதால், குடும்பத்திற்கு தேவையானதை ஈட்டும் முழு பொறுப்பு ஆண்களின் தலையிலேயே விழுகிறது.
இதனால், சமூகத்தின் பாலின சமத்துவம் பாதிக்கப்படுகிறது மற்றும் சமூகத்தின் பொருளாதாரப் போக்கும் மாற்றமடைகிறது.
அதேசமயம், கடந்தகால பேரிடர்களைப் போன்று, இப்பேரிடர் மக்களை இணைக்கவில்லை. மாறாக, அவர்களைப் பிரித்துள்ளது. அன்பு, இரக்கம் மற்றும் பச்சாதாபம் போன்றவை மக்களிடம் ஏற்படவில்லை. குறிப்பாக, அமெரிக்காவில் இந்த நிலை நிலவுகிறது.
கொரோனாவின் விளைவால் ஏற்பட்ட உளம்சார்ந்த, சமூகம் சார்ந்த மற்றும் பொருளாதாரம் சார்ந்த விளைவுகள், மிக நீண்டகாலம் நீடித்திருக்கும் என்று கூறப்படுகிறது.