கொரோனா பீதி: நெரிசல் மிகுந்த அண்ணா சாலை வெறிச்சோடியது….

சென்னை:

கொரோனா பீதி காரணம் மற்றும் அரசின் எச்சரிக்கை காரணமாக  நெரிசல் மிகுந்த அண்ணா சாலை மக்கள் நடமாட்டமின்றி,  வெறிச்சோடி காணப்படுகிறது.

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் இந்தியாவிலும் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இந்தியா முழுவதும் பள்ளிக் கல்லூரிகள், பொது நிகழ்ச்சிகள், சினிமா தியேட்டர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசும்  அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விட்டிருப்பதுடன், பேருந்து நிலையிம், ரெயில் நிலையம் போன்ற வற்றிலும் மக்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்தி வருகிறது…தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அத்துடன்  பொதுமக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் மக்கள் ஆரவாரமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

அதுபோல எப்போதும் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும், சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது….

பொதுவாக மாநிலங்களில் நடைபெறும்  முழுஅடைப்பு (பந்த்)  நேரங்களின்போதுதான் இதுபோன்று வாகன போக்குவரத்து இன்றி, அண்ணாசாலை வெறிச்சோடி காணப்படும்… ஆனால் தற்போது கொரோனா பீதி காரணமாக அண்ணாசாலை வெறிச்சோடி கிடப்பது… தமிழக வரலாற்றிலேயே முதன்முறை என்று கூறப்படுகிறது…

கொரோனா வைரஸ் மக்களிடையே எவ்வளவு பீதியை உண்டாக்கி இருக்கிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்….