கொல்கத்தா: கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 61 வயது கொல்கத்தா பெண்மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட விரும்பாமல், தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஆய்வகத்தில் அந்தப் பெண்மணி பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் கொல்கத்தாவிலுள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியே சென்றுள்ளார்.

அங்கு தனது பரிசோதனை அறிக்கையைக் காட்டி, தனக்கு தொற்று உறுதியா என்று கேட்டுள்ளார். அதைப் பார்த்த மருத்துவர்கள் அவரை உடனடியாக அட்மிட் ஆவதற்கு வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில், மருத்துவமனையின் அடுத்த கட்டடத்திற்கு அவரைக் கொண்டுசெல்ல, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டுவருவதற்குள், யாரிடமும் சொல்லாமல் அந்தப் பெண்மணி அந்த இடத்திலிருந்து நழுவி விட்டார்.

இதனையடுத்து, மருத்துவமனை சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண்மணியின் ஆதார் அட்டை எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்மணி தற்போது வரை கண்டறியப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வைரஸ் தொற்று என்பது குற்றமல்ல. எனவே, இதுதொடர்பாக பயப்படத் தேவையில்லை. தகவலை மறைக்க முயல்பவர்கள் அல்லது பயப்படுபவர்கள்தான் அதிக துன்பத்தை சந்தித்துள்ளார்கள்” என்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்த அதேநாளில் இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.