இந்தியாவில் ஒவ்வொரு 24 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி : இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: ஜப்பானில் 12 பேரின் மாதிரிகளில் ஒருவருக்கு தொற்று உறுதியாகுவதாகவும் விளக்கி இருக்கிறார்.

அமெரிக்காவை பொறுத்தவரை 5 மாதிரிகளில் ஒருவருக்கு கொரோனா  நிரூபணமாகி உள்ளது. நோய் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால் கொரோனா தாக்கம் இந்தியாவில் 3% ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,430 ஆக உள்ளது. 448 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா சிகிச்சையால் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதே போன்று இந்தியாவில் 24 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் போது தான் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான விகிதம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.