சென்னை

துவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர் உடலில் இருந்து பிளாஸ்மா பெறப்பட்டு அதைப் பாதிக்கப்பட்டோர் உடலில் செலுத்தும் சிகிச்சை பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.  இந்த சிகிச்சைக்கு இன்னும் அரசு முழு அனுமதி அளிக்காததால் இந்த பிளாஸ்மா சிகிச்சை இன்னும் சோதனை முறையில் உள்ளது.   நேற்று மட்டும் 46 காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம், “சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு இதுவரை 76 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இன்று ஒரே நேரத்தில் 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.  மழை, வெயில் பாராமல் பணியாற்றும் காவலர்கள் பல விதங்களில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார்கள்.

பொது மக்கள் காவல் துறையினரைப் பின்பற்றி பொது மக்களும் பிளாஸ்மா தானம் கொடுக்க முன் வந்து இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.   ஒரு சமயத்தில் ஒருவர் கொடுக்கும் 500 மில்லி பிளாஸ்மா இரண்டு உயிர்களைக் காப்பாற்ற உதவும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். ஒருவர் எப்படித் தொடர்ந்து இரத்த தானம் கொடுக்கிறாரோ அதைப் போல பிளாஸ்மா தானமும் 14 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து கொடுக்கலாம்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா மூலம் 70 பேர் குணமடைந்து உள்ளனர்.  இதுவரை 76 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். அதை 152 பேருக்குக் கொடுக்கலாம். இதுவரை 89 பேருக்குத் தான் பிளாஸ்மா சிகிச்சை கொடுத்து இருக்கிறோம்.  மருத்துவர்கள் எந்த நோயாளிக்கு எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று பார்த்துக் கொடுக்கிறார்கள். இப்போது தேவையான பிளாஸ்மா இருப்பில் இருக்கிறது.

இரத்த தானத்தை விட கொரோனா நோய்த் தொற்று காலத்தில் முக்கிய தேவையாக உள்ளது.  எனவே சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் பிளாஸ்மா வங்கி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதைத்தவிர 6 மருத்துவக் கல்லூரிகளில் அதற்கு உண்டான கருவிகளைத் தயார் நிலையில் வைத்து பிளாஸ்மா தானம் செய்யக் கூடிய வழிமுறைகளைச் செய்து இருக்கிறோம்.

அகில இந்திய அளவில் தமிழகத்தில் தான் கொரோனா தொற்றிலிருந்து அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 88 சதவீத பேரும், தமிழகம் முழுவதும் 81 சதவீத பேரும் குணமடைந்துள்ளனர்.  மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்தவுடனே தாமதிக்காமல் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு நாள் காய்ச்சல் தான் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்.” எனக் கூறி உள்ளார்.