சென்னை: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா தொற்று பரவத்தொடங்கி ஓராண்டுகளை கடந்த நிலையில், தற்போது, உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த  உருமாறிய கொரோனா   வைரஸ் முதன்முதலாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதை லண்டன் கொரோனா என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பரவியுள்ளதா? என்ற தகவலை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்து வந்த பலருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ரத்த மாதிரிகள் உருமாறிய கொரோனா குறித்த சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரவியது உருமாறிய கொரோனா வைரசா? என்பது குறித்த பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களுடன்  தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா கட்டுக்குள் இருந்து வருவதால்,   மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.