முதற்கட்ட தடுப்பூசி போட்ட பின்பும் நக்மாவுக்கு கொரோனா…!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முதற்கட்ட தடுப்பூசிப் போட்டுக் கொண்ட சில நாட்களிலேயே நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக நக்மா தனது ட்விட்டர் பதிவில் :

“சில தினங்களுக்கு முன்பு கொரோனாவுக்காக முதற்கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். நேற்று எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

முதற்கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அனைவரும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும். எந்த வகையிலும் மெத்தனமாக இருக்க வேண்டாம்”

இவ்வாறு நக்மா தெரிவித்துள்ளார்.