திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோவிலில் நாளை சனி பெயர்ச்சி  சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை என்று உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் விழாவில் கலந்து கொள்வோருக்கு உடல்வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக திருநள்ளாறில் இன்று குவிந்த ஏராளமான பக்தர்கள், கொரோனா சான்று இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.