டில்லி

கொரோனா சவாலை சமாளிக்க உதவிய வயநாடு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுளுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளிலும் பரவி உள்ளது  இதுவரை இந்தியாவில் 147 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகம் பேரும் இரண்டாவதாகக் கேரள மாநிலத்தவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இது குறித்து, “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொருத்தமான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.   நான் வயநாடு தொகுதிக்குச் செல்ல வேண்டுமென்று திட்டமிடப்பட்ட எனது பயணங்களை ஒத்திவைத்துள்ளேன்,

ஆயினும் வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வயநாடு மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லாவுடன் பேசினேன்.  கொரோனா தொற்று  அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்கள், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் நான் உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நமது மக்கள் அனைவரும் நிலைமை மேம்படும் வரை தங்களது அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் தவிர்க்க வேண்டுமெனவும் நான் அறிவுறுத்துகிறேன்.

இத்தகைய பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் உங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அவை அவசியமானவை ஆகும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய நாடுகள் இன்று கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டாவது நாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்பால் வயநாட்டில் கண்காணிப்பில் இருப்பவர்கள் விரைவில் நலமுடன் மீண்டு வரவேண்டுமென வாழ்த்துகிறேன். இவர்களுக்காக பணியாற்றிவரும் வயநாடு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் கடின உழைப்புக்கு ​​நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இத்தகைய பொது சுகாதார அவசர நிலை நம் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கற்பனை செய்ய முடியாத வகையில் பாதித்துள்ளது.  எனவே இதுபோன்ற சோதனை நேரங்களில், நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும்.” என  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.