கொரோனா : உலக அளவில் குணமடைந்தோர் சதவிகிதத்தில் இந்தியா 2 ஆம் இடம்

டில்லி

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவிகிதத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடம்,  பிரேசில் இரண்டாம் இடம் மற்றும் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளன.   இந்தியாவில் இதுவரை 25.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 50000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 18.60 லட்சம், பேர் குணமடைந்துள்ளனர். எண்ணிக்கை அளவில் இது மூன்றாம் இடமாகும்.

ஆனால்  பாதிக்கப்பட்டோர் மற்றும் குணமடைந்தோர் இடையில் சதவிகித அடிப்படையில்  பிரேசில் முதல் இடத்திலும் இந்தியா  இரண்டாமிடத்திலும் உள்ளது.  அமெரிக்காவில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் சதவிகித அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.   இந்தியாவில் குணமடைந்தோர் சதவிகிதம் 71.61% ஆக உள்ளது.

குணமடைந்தோர் சதவிகிதப்படி டில்லி 89.87% ஆக முதல் இடத்தில் உள்ளது.  தமிழகத்தில்  81.62% ஆகி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.  குஜராத் 77.53% தில் மூன்றாம் இடத்தில் உள்ளது.   இதைத் தவிர மத்தியப்பிரதேசம் 74.7%.  மேற்கு வங்கம் 73.25%, ராஜஸ்தான் 72.84%, தெலுங்கானா 72.72%, ஒடிசா 71.985 என உள்ளது.

இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ தாண்டி உள்ளது.   ஆயினும் இறப்பு சதவிகிதம் 1.94% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.