கொரோனா : குணமடைந்தோர் எண்ணிக்கை 60% ஐ நெருங்குகிறது

டில்லி

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 60% ஐ  நெருங்கி வருகிறது.

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.  இதுவரை இதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  எனவே பரிசோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய முறைகள் மட்டுமே நாடெங்கும் கையாளப்படுகிறது.  தற்போது ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே விஷயம் அதிகம் பேர் குணம் அடைந்து வருவதாகும்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மத்திய மற்றும் மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா நோயாளிகள் குணமடையும் விகிதம் 60% ஆகி உள்ளது.    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,19,696 அதிகமாகும்.

இந்தியாவில் இது வரை 3,34,821 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.   கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 59.07 சதவீதத்தை எட்டியுள்ளது.

சென்ற 24 மணி நேரத்தில் மட்டும், மொத்தம் 13,099 கொரோனா நோயாளிகள் குணமாகியுள்ளனர்.   இப்போது 2,15,125 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை சாலைகளைத் தொடர்ந்து அரசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 1049, கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.  இவற்றில் அரசு பரிசோதனைச் சாலைகள் 761, தனியார் பரிசோதனைச் சாலைகள் 288 ஆகும்.

இதைப் போல் பரிசோதனை எண்ணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2,10,292 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இதுவரை 86,08,654 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி