கொரோனா தொற்று – சென்னையில் 60% ஐ தாண்டிய குணமடைந்தோர் விகிதம்!

சென்னை: தமிழக தலைநகரில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60%க்கு மேல் குணமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகராட்சி எல்லையைப் பொறுத்தவரை, நேற்றுடன், 72 ஆயிரத்து 500 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது

இதில், 49 ஆயிரத்து 587 பேர் குணமடைந்தனர். இது 68% ஆகும். தவிர, 21 ஆயிரத்து 766 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், 1,146 பேர் இறந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி, மின்னல் வேகத்தில் மீண்டு வருகிறது. அனைத்து மண்டலங்களிலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60%க்கும் மேல் குணமடைந்துள்ளனர்.

முதல் மண்டலமான திருவொற்றியூரில், நேற்றுடன் 2,845 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 1,801 பேர் குணமடைந்துள்ளனர். இது 63% என்ற அளவாகும். மேலும், 974 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 என்பதாக உள்ளது.

மணலியில், 1,313 பேரில், 869 பேர் குணமடைந்த நிலையில், 66% ஆக உள்ளது. தவிர, 429 பேர் மட்டுமே சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

தொற்று பாதிப்பில், ருத்ர தாண்டவமாடிய ராயபுரத்தில், 9,242 பேரில், 7,340 பேர் குணமடைந்த நிலையில், 79% ஆகவும், மாநகராட்சியில் முதலிடமாகவும் உள்ளது.

மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமான தண்டையார்பேட்டையில், தொற்று பாதித்த 7,903 பேரில், 6,149 பேர் குணமடைந்த நிலையில், 77% ஆக உள்ளது. தவிர, 20 சதவீதமான, 1,628 பேர் மட்டுமே, சிகிச்சை பெறும் நிலையில், 166 பேர் இறந்துள்ளனர்.