சென்னை:

மிழக அரசு, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணம் மற்றும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இந்த நிவாரண பொருட்கள் பணம் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என்றும், நிவாரண நிதியாக ரூ.5,280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் பலியான நிலையில், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக் கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தினக் கூலிகள்,   விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி தற்போது, அதற்கான நிதி ஒதுக்ககீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ஏப்ரல் மாதம் முதல், தமிழகத்தில் உள்ள  அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000   நிவாரணமாக வழங்கப்படும். மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு அந்தந்த தேதியில் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அத்துடன் அந்த  மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும்  ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 உடன் கூடுதலாக 1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.  100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம்,  சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும் என்பன உள்பட பல்வேறு அறிவிப்புகள் அரசாணையில் வெளியிடப்பட்டு உள்ளது.