தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.1200 ஆக குறைப்பு! தமிழகஅரசு

சென்னை: தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.1200 ஆக குறைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் குறிப்பிட்ட மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களில் சோதனை கட்டணம் ரூ.4500 என வசூலிக்கப்பட்டது. பல தனியார் மருத்துவமனைகளில் ரூ.8 ஆயிரம் வரையும் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகஅரசு, கொரோனா சோதனை மேற்கொள்ள குறிப்பிட்ட சில ஆய்வகங்களுக்கும், மருத்துவமனைகளுக்கு  மட்டு  அனுமதி வழங்கியது. அதன்படி,  ஆர்டி-பி.சி.ஆர் (RT-PCR) சோதனைக்கான செலவு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டது. . மேலும், வீட்டுக்கு வருகை தந்து சோதனை செய்ய விருப்பப்பட்டால் கூடுதல் கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆர்.டி.-பி.சி.ஆர் (RT-PCR) இயந்திரங்களால் COVID-19 நோய்த்தொற்றுக்கான ஆய்வக சோதனைகளுக்கான தர சோதனை அளவீடுகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தனியார் ஆய்வகங்களில், கொரோனா சோதனை கட்டணம்  ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதுபோல,  முதல்வரின் விரிவான காப்பீடுதிட்டத்தின்படி, கொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.800 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.