சென்னை : கொரோனா விதிகள் மீறல் காரணமாக சென்னையில்  ரூ.412 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் பாதிப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தொற்று பரவல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு மற்றும் ஞாயிறு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்சது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்போது, கொரோனா  பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களிடமிருந்து 22.04.2021 அன்று வரை மொத்தம் ரூ.412 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு கூறியுள்ளது.