புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக  112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை ஊழியருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகையை 48 மணி நேரம் மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1151 ஆக உயர்ந்துள்ளது. தற்போதையில் 553 பேர்சிகிச்சை பெற்று வருவதாகவும், 584 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், இதுவரை 14 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,  புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 48 மணி நேரத்திற்கு ஆளுநர் மாளிகை மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, கவர்னர் உட்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கவர்னர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று  கவர்னர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது