சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில், சென்னை அண்ணாசாலை ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கிலேயே ஊரடங்கும் மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் ஏராளமானோர் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்று வருகின்றனர்.  இதை தடுக்க காவல்துறையினல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், நாளுக்கு நாள் வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

சென்னையில் இதுவரை   373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பட்சமாக ராயபுரம் பகுதியில்  117 பேரும் , தண்டையார்பேட்டையில் 46 பேரும் , திரு.வி.க நகரில் 45 பேரும் , அண்ணா நகரில் 32 பேரும் , தேனாம்பேட்டையில் 44 பேரும் , கோடம்பாக்கத்தில் 36 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மொத்தமாக 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  சென்னை அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. அண்ணா மேமடபாலத்தில் இருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை செல்ல காவல் துறை தடை விதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான நேரம் முடிந்ததால் சாலை மூடப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.