சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நாளை தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்., தமிழகத்திலும்  நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 7,800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் பலியாகினர்.  இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா  நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த 10ம் தேதி  அறிவித்துள்ளது.  ஆனால், மக்கள் இன்னும் முழுமையாக கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால்  கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதன்பிறகு மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.