கொழும்பு: இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டு, தேர்தலும் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து,கொரோனாவை பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உலக நாடுகளில் பரவிய கொரோனா இலங்கையிலும் பரவத்தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் அதன் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், அரசின் நடவடிக்கை காரணமாக, தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 5ந்தேதி அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  இலங்கையில் மினுவங்கொட பகுதியில்  உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 81 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,483ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

உலக நாடுகளின் கொரோனா பாதிப்பில் 135வது இடத்தில் உள்ள இலங்கையில், இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3979 ஆக உள்ளது. இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 3,266 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து உள்ளனர். அதேசமயம், நாட்டில் இதுவரை மொத்தம் 2,98,501 பேருக்கு  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைத்தொடர்ந்து இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான திவுலப்பிட்டிய  மற்றும் மினுவங்கொட ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.