ஐரோப்பாவில் குளிர் காலத்தால் கொரோனா பரவுதல் அதிகரிப்பு

மாட்ரிட்

குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவலாம் என ஐரோப்பிய நாடுகளில் அச்சம் அதிகரித்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10000க்கும் அதிகமானதாகத் தகவல் வெளியானது. இது இந்நாட்டைப் பொறுத்தவரை மிகவும் குறைவாகும்.   இதன் மூலம் இந்நாட்டில் தொற்று நோயை நிர்வகிக்க முழுத் திறன் உள்ளதாகப் பாராட்டு எழுந்தது.     அத்துடன் இது போல் பல நாடுகளில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைவான அளவில் பதிவாகின.

அதே வேளையில் போலந்து நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதியானது.  அத்துடன் ஏற்கனவே பல நாடுகளின் தலைவர்கள் தனிமையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.  இதைத் தொடர்ந்து ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்ற வாரம் பெல்ஜியம் நாட்டில் இரண்டு மணி நேர ஊரடங்கை அறிவித்து இருந்தனர்.   மேலும் நள்ளிரவு ஊரடங்கை இரவு 10 மணிக்கே கொண்டு வந்துள்ளனர்.  நாட்டில், ஜிம், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள், உயிர் காட்சியகங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  அத்துடன் கடைகளை இரவு 8 மணிக்குள் மூட உத்தரவு இடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீவிர பாதிப்பால் தொடர்ந்து பலமாதங்களாகப் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டுள்ள பிரான்ஸ் நாட்டில் இப்போது இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது.   இதைப் போல் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவில் கொரோனா தொற்று மிகவும் ஆபத்தான கட்டத்துக்கு நுழைந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் கடந்த சனிக்கிழமை முதலே தெரிய தொடங்கி உள்ளது.   ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகள் தினசரி தொற்று பதிவுகளை வெளியிடாமலும் அல்லது குறைத்து வெளியிடவும் ஆரம்பித்தன.   இதனால் வருங்காலத்தில் கொரோனா தொற்றை இந்த நாடுகள் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது பற்றி ஊகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.