கொரோனா பரவுதல் அதி வேகமாக இல்லை : மத்திய அரசு

--

டில்லி

கொரோனா பரவுதல் இந்தியாவில் அதி வேகமாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 1669 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.   இதனால் பாதிப்பு எண்ணிக்கை 23,039 ஆகி உள்ளது.   இதில் 721 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 5012 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  இது கிட்டத்தட்ட 20% ஆகும்.  பாதிப்பு அடைந்தோரில் அதிக அளவில் மகாராஷ்டிராவில் உள்ளனர்.  அடுத்த இடங்களில் குஜராத் மற்றும் டில்லி உள்ளன.

பிரதமர் மோடி கொரோனாவை எதிர் கொள்வது தொடர்பாக 11 தேசியக் குழுக்களை அமைத்துள்ளார்.  இவற்றில் உள்ள முக்கிய அதிகாரி சி கே மிஸ்ரா செய்தியாளர்களிடம், “கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். அதே வேளையில் அதிவேகமாக கொரோனா பரவவில்லை.குறிப்பாகக் கடந்த 14 நாட்களாக 23 மாநிலத்தில் 78 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்ப ஏற்படவில்லை. அதைப்போல் கடந்த 28 நாட்களாக 12 மாவட்டங்களில் புதிதாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை

நாம் ஊரடங்கைத் தீவிரப்படுத்தியதுடன் அதனை நீட்டிக்கவும் செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.   இந்த 30 நாட்கள் ஊரடங்கால் நாம் கொரோனா பரவுதலை அதிகளவு கட்டுப்படுத்தியுள்ளோம்.கொரோனா  பாதிப்பு இரு மடங்காக அதிகரிப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறது. இந்த க்ட்டுப்ப்டுத்தலில் மற்றொரு நடவடிக்கையாகப் பரிசோதனைகளை நாம் அதிகப்படுத்தியுள்ளோம்.

சென்ற 30 நாட்களில் சோதனை செய்யும் அளவு 33 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றாலும் இவை போதுமானதாக இல்லை.  நாம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். கடந்த மார்ச் 23-ம்தேதி நிலவரப்படி 14,915 பேருக்குப் பரிசோதனை செய்த போது. அவர்களில் 4 முதல் 4.5 சதவீதம் வரையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதைப் போல் இப்போது 5 லட்சம் பேருக்கும் அதிகமாகச் சோதனை நடத்தியுள்ளோம். அதே சதவீத பாதிப்புதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே பாதிப்பு அதி வேகமாக இல்லை எனக் கூறலாம்.  அத்துடன் இந்த பாதிப்பு விகிதாச்சார அடிப்படையில் ஒரே நிலையில் உள்ளதாகவும் கூறலாம்” என தெரிவித்தார்.