சென்னை:

கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அந்தந்த மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கும், சிகிச்சை மற்றும் மாத்திரை பெற வருபவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தற்போது ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரரர் அரசினர் பன்நோக்கு மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் இதேபோன்று மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் தலா ரூ.2 லட்சம் செலவில் கிருமி நாசினி இயந்திரம் அமைக்கப்படுகிறது.

இந்த சுரங்க வடிவிலான கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் மருத்துவமனைகளின் நுழைவாயில்களில் வைக்கப்படுகிறது.

இவற்றை கடந்து செல்லும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும்.

இந்த கிருமி நாசினி இயந்திரத்துக்குள் 3 முதல் 5 வினாடிகள் சுரங்கத்துக்குள் சென்ற பின்புதான் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதனால், சருமத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் இதன் மூலம் நோய் கிருமி பரவுவது முற்றிலும் தடுக்கப்படும்.

தற்போது சென்னையில் 4 மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் மற்ற மருத்துவமனைகளில் வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.