கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந்தேதி மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினசரி 6 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதன்மூலம்  தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,69,370 ஆக அதிகரித்துள்ளது .

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம்,  8-வது கட்டமாக வரும்  30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4 முறை பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி,  இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. மால்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,   ஊரடங்கு முடிவதற்கு முன்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவார். அதுபோல வரும் 29-ந்தேதி  தலைமைச் செயலகத்தில் முதல்வர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து,  கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினருடனும் தலைமைச் செயலாளர் சண்முகம்இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் ரயில்வே, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.